தோழர் லெனின் தொடங்கி தசரத் தேவ் வரை..

 இந்தியாவில் இடதுசாரிகள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் ஒன்று திரிபுரா. வளர்ச்சியல்லாத பின்தங்கிய நிலையில் இருந்த பழங்குடியின மக்கள் கணிசமானோர் வசிக்கும் மாநிலமான திரிபுரா இந்தியாவிலேயே நலன் மேம்பாடு தனிநபர் வருமானம், கல்வியறிவு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னுதாரணமாக உயர்ந்து நிற்கிறது. 

 இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்தாலும் மன்னாராட்சியின் கீழ் இருந்த திரிபுரா பகுதி 1949-ல் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. கந்துவட்டி கொடுமைகளை எதிர்த்தும் , பழங்குடியின மக்களின் நில உரிமைகளுக்காகவும் மக்கள் விடுதலை குழு என்ற அமைப்பை ஆரம்பித்து கம்யூனிஸ்ட்டுகள் போராடி வந்தனர். 

திரிபுரா 1972-ம் ஆண்டு மாநில அந்தஸ்து பெற்றது.  பழங்குடியின மக்களின் நலன்களுக்காகவும், குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1978-ல் ஆட்சியை பிடித்து தோழர் நிருபன் சக்ரபர்த்தி முதல்வரானார். ஆட்சி பொறுப்பேற்றதும் நிலசீர்திருத்த சட்டங்களை அமல்படுத்தி குத்தகை விவசாயிகள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தியும், பழங்குடியின மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களையும் திருப்பி அவர்களுக்கே அளித்தனர்.

  பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில்  "திரிபுரா பழங்குடியினர் மாவட்ட தன்னாட்சி கவுன்சில் என்ற அமைப்பை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏற்படுத்தினர். 

இதன் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டு பழங்குடியினர் வளர்ச்சிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் மட்டுமின்றி இதர மக்கள் இடையிலான ஒற்றுமையும் இந்த அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அமைப்புக்கான உறுப்பினர்களும் தேர்தல் மூலம் 1985-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவரும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகின்றனர். 

வனப்பகுதிகளில் பழங்குடியினருக்கான உரிமை, சாலை மற்றும் போக்குவரத்து வழித்தடங்களை நிர்வகிப்பது தொடங்கி வனப்பகுதிகளில் சுரங்கங்கள் அமைப்பதற்கு பழங்குடியின மக்களின் அனுமதி பெறுவது உள்ளிட்டவை இந்த அமைப்பின் அதிகாரவரம்பாக நிர்ணயிக்கப்பட்டு மாநில அரசு நிதி வழங்கி வருகிறது.

மாநிலத்தில் அதிகமாக வசிக்கும் வங்காளி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி, பிரிவினைவாத இயக்கங்களின் மூலம் காங்கிரஸ் கட்சி கலவரத்தை ஏற்படுத்தியது. இதில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் பலரும் உயிரிழந்தனர். கலவரத்தின் மூலம் 1988-ல் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அந்த ஒரு முறையை தவிர (1988-1993, 1993-2018) 25 ஆண்டுகள் இடதுசாரிகளே திரிபுரா மாநிலத்தில் ஆட்சியமைத்து இருக்கின்றனர்.

திரிபுரா மாநிலம் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், உள்கட்டமைப்பு வசதிகளில் வடகிழக்கு மாநிலங்களிலேயே முன்னேறிய மாநிலமாக இருந்து வருகிறது. (HDI) குறியீட்டின்படி மனிதவள மேம்பாட்டு, கல்வியறிவு, மலைவாழ் மக்களுக்கான வாழ்நிலை ஆகிய பட்டியலில் இந்தியாவிலேயே முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது. 

பிரிவினைவாத அமைப்புகளின் உதவியாலும், மதவாத சக்திகளின் பொய் பிரசாரத்தாலும் வெற்று வாக்குறுதிகளை வீசி 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது. ஆட்சியை பிடித்ததுமே கம்யூனிஸ்ட்டுகள் மீது வன்முறையை ஏவியது. மாநிலத்தின் பல பகுதிகளில் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டு, தோழர்கள் பலரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். மேலும் புரட்சியாளர் லெனின் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் தகர்த்து அவர்களது கோரமுகத்தை காட்டத் தொடங்கினர். 

அன்றிலிருந்து இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழர்கள் மீதும் தொடர்ச்சியாக வன்முறையாளர்களை ஏவி வந்தனர். ஆளும் பிப்ளேப் தேவ் தலைமையிலான பா.ஜ.க. அரசு இந்தியாவே பிரமித்து பார்த்த எளிமையான முதலமைச்சர் தோழர் மாணிக் சர்கார் மீது தாக்குதல்களையும், அவரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையும் ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில்தான் கடந்த செப் 8-ந்தேதி கடந்த தேர்தலில் பெரிதும் மக்கள் மத்தியில் கவரப்பட்ட வாக்குறுதியான "அனைவருக்கும் வேலை" என்பது நிறைவேற்றாத அரசாங்கத்தை கண்டித்து ' எனது வேலை எங்கே? ' என்ற பிரச்சாரத்தை தொடங்கியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI). இதன் ஒருபகுதியாக தோழர் மாணிக் சர்கார் தலைமையிலான பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்காததால் தடையை மீறி நடந்த பேரணியில் பா.ஜ.க குண்டர்கள் தாக்குதல்களை நடத்தினர். 

இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 மாவட்ட அலுவலகங்கள், 26 சப்டிவிசன் அலுவலகங்கள், கட்சியின் தேசகர்தா நாளிதழ் அலுவலகம் மேலும் சில பத்திரிகை  அலுவலகம் மற்றும் அகர்தலாவில் உள்ள மாநில கட்சி தலைமை அலுவலகத்தின் மீதும் வன்முறை தாக்குதலை நடத்தி தீ வைத்து எரித்து சூறையாடி இருக்கின்றனர். பழங்குடியின மக்களின் மகத்தான தலைவர் தோழர் தசரத் தேவ் சிலையையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

பாதுகாப்பிற்காக இருந்த மத்திய காவல் படையினரை விலக்கி கொண்டு கட்சி குண்டர்களால் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆளும் அரசு செயல்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த முதல்வர் பிப்ளேப் தேவ் இரண்டு நாட்கள் கழித்து சி.பி.எம். கட்சியினரே இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணம் என பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கலவரம் தொடர்பாக பதிவான வீடியோ பதிவுகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கையில் பா.ஜ.க.வின் கொடியோடும், 'பாரத் மாதா கி ஜே' என்றும் கோஷமிடுபவை தெரியவந்துள்ளன. 

மக்களிடையே அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றாத ஆளும் அரசு மற்றும் முதல்வர் தன் மீது உள்ள அதிருப்தியை மூடி மறைப்பதற்காக இத்தகைய  சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். மக்கள் இடதுசாரிகளின் ஆட்சிகாலத்தில் இருந்த நிலையை நினைவுப்படுத்தி பார்ப்பதையும், கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கை மக்களிடையே குறைப்பதற்காகவும் கலவரத்தை தூண்டி இருக்கின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அப்போது காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்த ராகுல் காந்தி மார்க்சிஸ்ட்டுகள் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவை விட்டே விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றார். திரிபுரா மக்கள் அதனை பொய்யாக்கி மார்க்சிஸ்ட்டுகள் விரட்டப்படவேண்டியவர்கள் அல்ல.. வளர்க்கப்படவேண்டியவர்கள்! வரவேற்கப்பட வேண்டியவர்கள்! என கூறும் விதமாக அரியணையில் அமர்த்தினர்

 இத்தகைய சூழலிலும் திரிபுரா மக்கள் இடது முன்னணியின் தோழர்கள் உடன் நின்று வருகின்ற 2023-ம் ஆண்டு தேர்தலிலும் இதனை மீண்டும் மெய்ப்பித்து காட்டுவார்கள்.. 


Comments