உலகின் பார்வையில் 'ஓற்றைக்கண் ஓமரின் தாலிபான்கள்'
தாலிபான்கள் கந்தகார் நகரை இரவோடு இரவாக தாக்கி கைப்பற்றியபோது ஆப்கன் மக்கள் அனைவரும் வீதிகளில் வெடி வெடித்து, தங்கள் வீடுகளுக்கு அழைத்து விருந்து உபசரித்து வரவேற்றார்கள். இது நடந்தது 1996-ல், ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழ்! தங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு மகனை தாலிபான் படை குழுவுக்கு அனுப்பும் அளவிற்கு மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த அவர்கள் இன்று செல்லாக்காசாகி போனதற்கு காரணம் மத அடிப்படைவாதமும், ஆப்கனின் அரசியல் சூழ்நிலையும்தான்... உலகிலேயே போராளிகளாக அடையாளம் காணப்பட்டு குறுகிய காலத்தில் ஆயத போராட்டத்தின் மூலம் ஆட்சியை பிடித்து பின்னர் தீவிரவாதிகளாக மாறியது 'தாலிபான்கள்தான்'.
ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் ஆளுயுர குன்றுகளையும், ஆழமான குகைகளையும் உள்ளடக்கிய நாடு. பனிப்போரின் போது சோவியத் யூனியனும், இப்போது அமெரிக்காவும் அங்குள்ள முஜாகிதீன்களையும், தீவிரவாத குழுக்களை சமாளிக்க முடியாமல் திணறியதற்கு முக்கிய காரணம் அந்நாட்டின் பூகோள அமைப்பாகும்.
பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்திற்கு எதிரான போர், வல்லரசுகளுக்கு இடையேயான பனிப்போர், முஜாகிதீன்களின் உள்நாட்டு போர் என எந்நேரமும் போர் சூழலிலேயே சுழன்று கொண்டிருந்த ஆப்கானிஸ்தானில் 1996-ல் தாலிபான்கள் தலைமையில் ஒரு ஆட்சி அமைந்தது.
தாலிபான்களின் தலைவரான முகமது ஓமர், Islamic Emirates of Afghanistan-னின் 'முல்லா முகமது ஓமரானார்'. எதிர்தரப்பினரை விரட்டியடித்த தாலிபான்களை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். ஒரு வழியாக உள்நாட்டு சண்டை முடிவடைந்தது என பெருமூச்சு விட்ட மக்களுக்கு தாலிபான்களின் வடிவில் பிரச்சனை உருவெடுத்தது. இஸ்லாமிய ஷரியத்தை அடியொற்றியதாக கூறி கடுமையான சட்ட திட்டங்கள் நாட்டில் அமல்படுத்தப்பட்டது. வங்கிகள், பல்கலைகழகங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், பூங்கா என அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. பெண்கள் வீட்டை விட்டு துணையின்றி தனியாக வெளியே வரக்கூடாது. ஹிஜாப், பர்தா போன்ற உடைகளே அணியவேண்டும். பெண்கள் சத்தம்போட்டு பேசவோ, சிரிக்கவோ, நடனம் ஆடவோ கூடாது என பெண்களின் நிலை படுமோசமானது. அரசு துறையில் பணிபுரிந்த அனைவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். பத்திரிகை அலுவலகங்கள், ஐ.நா மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு நிரந்தர பூட்டு போடப்பட்டது.
சிரமேல் தூக்கி வைத்து கொண்டாடிய மக்களின் தலையில் இடியை இறக்கிய தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து எதிர்தரப்பு முஜாகிதீன்களை வேட்டையாடினர். முன்னாள் அதிபரான Dr. நஜிபுல்லாவை படுகொலை செய்து லந்தர் போஸ்ட்டில் தொங்கவிட்டு உலகையே அதிர செய்தபோதுதான் தாலிபான்களின் சுயரூபம் வெளிஉலகிற்கு வெளிப்பட்டது. அமெரிக்காவின் அடியாள் அல்-கொய்தா பரமவிரோதியானபோது தனது நண்பரான ஒசாமா பின்லேடனை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தாலிபான்கள் அரசு. அடைக்கலம் கொடுத்ததோடு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பிற்கு நிதியுதவி அளித்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் முல்லா ஓமர். தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய ஆப்கானிஸ்தான் உலகில் நடந்த பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக மாறிபோனது.
இந்திய விமான கடத்தல் (கந்தகார்) , காஷ்மீரில் 35 சீக்கியர்கள் படுகொலை, என அண்டை நாட்டிலும், சொந்த நாட்டு மக்கள் மீதும் பல பயங்கரவாத செயல்களை அரங்கேற்றியது. ஆப்கன் மக்கள் பஞ்சத்தினால் ரொட்டி கூட கிடைக்காமல் அல்லல் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் பின்லேடனுக்கும், அவரது அமைப்புக்கும் பாலூட்டி கொண்டிருந்தது. விரக்தியின் உச்சத்தில் மக்கள் இருந்தபோதுதான் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலை தாலிபான்களின் உதவியுடன் அல்-கொய்தா நடத்தியது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக அமெரிக்கா வெகுண்டெழுந்து பயங்கரவாதத்தை ஒழிக்க சபதமேற்று ஆப்கன் மீது போர் தொடுத்து தாலிபான்களை ஆட்சியில் இருந்து விரட்டியடித்து அங்கு தனக்கு சாதகமான ஒர் அரசை ஏற்படுத்தியது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையான ஒசாமா பின்லேடனை தேடி வந்த அமெரிக்காவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாகிஸ்தான் நாட்டு எல்லை பகுதிகளில் பதுங்கியிருந்த பின்லேடனை 2004-ல் ரகசிய தாக்குதலின் மூலம் பழிதீர்த்து கொண்டது. அதன்பின்னர் பயங்கரவாதத்தை அடியொடு ஒழிப்பதாக ஆப்கனில் டேரா போட்ட நேட்டோ படைகள் ஆப்கன் மக்கள் மீதும், பெண்கள் மீதும் முந்தைய ஆட்சியாளர்களுக்கு சற்றும் சளைப்பில்லாத வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியது. வரலாற்றிலேயே மிக நீண்ட போராக கருதப்பட்ட இவை இறுதியில் அமெரிக்காவிற்கு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. அமைதி ஒப்பந்தம் என்ற பேரில் தாலிபான்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டது. இறுதியில் 2020-ல் டிரம்ப் தலைமையிலான அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அல்-கொய்தா உள்ளிட்ட எந்த பயங்கரவாத அமைப்புகளுக்கும் உதவ மாட்டோம் என உறுதியளித்ததை தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கி கொண்டது. 20 ஆண்டுகளாக ஒடுங்கியிருந்த தாலிபான்கள் துருப்புகள் விலக்கப்பட்ட 20 நாட்களில் ஆட்சியை அதிகாரத்தை திரும்பவும் பிடித்து இருக்கின்றனர். தாலிபான்கள் காபூல் நகரை பிடித்தபோது தங்களின் கடந்தகால நினைவுகளை அசைபோட்ட ஆப்கன் மக்கள் பலரும், நேட்டோ படைகளுக்கு உதவிய அதிகாரிகளும், மக்களும் உயிர் பயத்தில் விமானத்தின் டயரில் அமர்ந்தாவது போய்விடும் அளவுக்கு அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். முந்தைய ஆட்சிகாலங்களில் செய்த தவறை செய்யமாட்டோம், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தாலும், ஏற்கனவே தாலிபான்களின் ஆளுகையில் இருந்த மாகாணங்களின் சூழல் இதை வெறும் வாய்ப்பேச்செனவே நிரூபிக்கின்றன.
Comments
Post a Comment